Quantcast
Channel: யுவகிருஷ்ணா
Viewing all articles
Browse latest Browse all 406

கமாண்டோ : இந்தியன் ராம்போ

$
0
0

ஹாங்காங்கில் புரூஸ்லீ, ஜாக்கிசான், ஜெட்லி. ஹாலிவுட்டில் சில்வஸ்டர் ஸ்டாலோன், அர்னால்ட் ஸ்வாஸ்நெகர். பாங்காக்கில் கூட டோனி ஜா. நமக்கு இப்படியொரு ரியல் சூப்பர்மேன் என்பது இந்திய ஸ்டண்ட் ரசிகர்களுக்கு எவ்வளவு ஆண்டு கனவு? கிடைத்துவிட்டார் வித்யூத் ஜம்வால். பில்லா-2, துப்பாக்கி படங்களில் வில்லனாக நடித்தாரே அவரேதான்.

“இப்படத்தில் வித்யூத் ஜம்வால் நடித்த ஸ்டண்ட் காட்சிகளில் அவர் உடலில் கயிறு கட்டிக்கொள்ளவில்லை. போலவே கம்ப்யூட்டர் கிராபிக்ஸும் பயன்படுத்தப்படவில்லை”. ‘கமாண்டோ – ஒன் மேன் ஆர்மி’ படத்தின் டைட்டிலுக்கு முன்பாகவே ஸ்லைட் போடுகிறார்கள். “இப்படத்தில் விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை” என்று சொல்வதைபோலதான் இதையும் சொல்கிறார்கள் என்று ‘தேமே’வென்று பார்க்க ஆரம்பிக்கிறோம். படம் முடியும்போதுதான் புரிகிறது வித்யூத் எத்தகைய சாதனை சரித்திரத்தை திரையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் என்று.
                                  
வித்யூத் ஜம்வால் 1978ல் ஜம்மு காஷ்மீரில் பிறந்தார். அப்பா இராணுவத்தில் பணிபுரிந்தார். அடிக்கடி இடம்பெயர்ந்துக்கொண்டே இருப்பார். இராணுவ வீரருக்கு வாழ்க்கைப்பட்ட எந்த பெண்தான் மகிழ்ச்சியான இல்லறவாழ்வினை வாழ முடியும்? வித்யூத்தின் அம்மா பக்தி மார்க்கத்தில் நாட்டம் செலுத்தினார். கேரளாவில் ஓர் ஆசிரமத்திலேயே தனது வாழ்க்கையை கழிக்கத் தொடங்கினார். வித்யூத் சிறுவயதில் போர்டிங் பள்ளியில் படித்தார். அப்பாவின் இராணுவ இரத்தம் ஓடியதாலேயோ என்னமோ சண்டையில் பயங்கர ஆர்வம். பள்ளியில் வித்யூத்தை கண்டாலே சக மாணவர்களுக்கு பயம் கலந்த மரியாதை. கண்ணில் ஒருமாதிரி வில்லத்தனம். நடையில் ஒரு தெனாவட்டு என்று காட்டுச்செடி மாதிரி கரடுமுரடாக வளர்ந்தார்.

vidyut1
விடுமுறையின் போது கேரளாவுக்கு போய் அம்மாவோடு இருப்பார். மகன் முரட்டுத்தனமாக வளர்வதை கண்டு அம்மா கவலைப்பட்டார். இவனை முறைப்படுத்த வேண்டுமே என்று மெனக்கெட்டார். கடவுள் வழிபாடு, யோகா மாதிரி விஷயங்களில் மகனுக்கு ஆர்வமில்லை என்பதை கண்டுகொண்டார். அவன் வழியிலேயே அவனை ஒழுங்குப்படுத்துவது என்ற முடிவுக்கு வந்தார். சண்டை போடுவதில் தீவிரம் செலுத்திய வித்யூத், ‘களறி’ கற்ற கதை இதுதான்.


களறிப்பயிற்சி உடலை உறுதியாக்கியதோடு இல்லாமல் உள்ளத்தையும் நெறிப்படுத்தியது. சண்டைக்கலை என்பது மற்றவர்களை அச்சுறுத்துவதற்காக அல்ல. ஆக்கப்பூர்வமான முறையில் முன்னேறுவதற்கான பாடம் என்பதை உணர்ந்தார். கண்களில் சாந்தம் குடிகொண்டது. கடுமையான பயிற்சிகளால் உடலில் சிக்ஸ்பேக் தோன்றியது. கைகள் தூண்களாக வலிமை பெற்றது.

“களறிதான் உலகத்திலிருக்கும் எல்லா தற்காப்புக் கலைகளுக்கும் தாய்க்கலை என்கிறார்கள். மற்ற கலாச்சார தற்காப்புக் கலைகளில் எதையெல்லாம் செய்கிறார்களோ, அது எல்லாமே களறியில் இருக்கிறது. சொல்லப்போனால் இதில் மிகச்சிறந்த முறையில் இருக்கிறது” என்கிறார் வித்யூத் ஜம்வால்.

எழுபதுகளின் இறுதியில் பிறந்தவர்களுக்கு ப்ரூஸ்லி தெய்வம். ஜாக்கிசான் தேவதூதன். சில்வஸ்டார் ஸ்டாலோன், ஆர்னால்ட் எல்லாம் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டு பூமியை காக்க பிறந்தவர்கள். வித்யூத்துக்கும் அப்படித்தான். இவர்களது ஸ்டண்ட் காட்சிகளை எல்லாம் இமைகளை மூடமறந்து ரசித்தார். தானும் ஒருநாள் இவர்களைப் போல திரையில் தீயவர்களை ஒழிக்க உறுதிபூண்டார். சினிமா வாய்ப்பு தேட ஆரம்பித்தார். நெடிய தேடல். முகத்தில் உணர்ச்சிகளே வரவில்லையே, நீ எப்படி நடிகன் என்று கேலி பேசினார்கள். இவர் நிகழ்த்தி காட்டிய ஸ்டண்ட் வித்தைகளை பார்த்தவர்கள், இதையெல்லாம் ஷாருக்கான், சல்மான்கானே அசால்டாக செய்கிறார்கள். நீ எதற்கு புதுசாய்.. என்று நிராகரித்தார்கள். சினிமா வாய்ப்பு கிடைக்கும் வரை ஆணழகனாக ஃபேஷன் ஷோக்களில் மிடுக்காக நடந்தார். மாடலிங் செய்தார். ஆனால் வாய்ப்பை மட்டும் தேடிக்கொண்டே இருந்தார்.
                                                 vidyut2
ஃபோர்ஸில் கிடைத்தது விடிவு. தமிழ் ‘காக்க காக்க’ இந்தியில் ‘ஃபோர்ஸ்’ ஆனது. ஹீரோ ஜான்ஆபிரகாமுக்கு சிக்ஸ்பேக் என்பதால், அவருக்கு இணையான ஆணழகனை வில்லனாக்க தேடிக்கொண்டிருந்தார்கள். வித்யூதுக்கு அடித்தது அதிர்ஷ்டம். தமிழில் ஜீவன் செய்த கேரக்டர். வித்யூத் சிறப்பாக செய்திருந்தாலும் படம் சொல்லிக் கொள்ளும்படி ஹிட்டாகவில்லை. சிறந்த அறிமுகமாக ஃப்லிம்பேர் விருது மட்டும் கிடைத்தது. அதேநேரம் தெலுங்கு சினிமாவின் இளவரசரான ஜூனியர் என்.டி.ஆரின் கண்களில் பட்டுவிட்டார். விளைவாக அவர் நடித்த சக்தி, ஊசரவல்லி படங்களில் வித்யூத்தான் வில்லன். அப்படியே ரூட் பிடித்து தமிழுக்கும் வந்தார். அஜித்தின் பில்லா-2 அட்டகாசமான எண்ட்ரி. விஜயின் துப்பாக்கியில் தூள் கிளப்ப, ஓவர்நைட்டில் தென்னிந்தியாவின் டிமாண்ட்டட் வில்லனாக உயர்ந்தார் வித்யூத் ஜம்வால். டிமாண்ட் இருக்கிறதே என்று கிடைத்த படங்களை எல்லாம் ஒப்புக்கொள்ளாமல் கவனமாக அடுத்த அடி எடுத்து வைத்தார். அதுதான் ‘கமாண்டோ’.

vidyut
அக்‌ஷய்குமாரை வைத்தே எப்போதும் படங்கள் இயக்கிக் கொண்டிருக்கும் இயக்குனர் விபுல் அம்ருத்லாலுக்கு இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைக்கும் ஒரு அட்டகாசமான ஆக்‌ஷன் படத்தை தயாரிக்க வேண்டும் என்பது கனவு. அப்படி நினைத்துதான் ‘காக்க காக்க’ ரீமேக் உரிமை வாங்கி, ‘ஃபோர்ஸ்’ எடுத்தார். அது ஊத்திக்கொண்டதால் சோர்ந்துவிடாமல், அடுத்த திட்டத்துக்கு முயற்சித்துக் கொண்டிருந்தார். ஃபோர்ஸில் வில்லனான வித்யூத், விபுலோடு தொடர்ச்சியாக ‘டச்’சில் இருந்துவந்தார். சரியான நேரம் அமைந்ததுமே ‘கமாண்டோ’வுக்கு பூஜை போட்டார்கள். இம்முறை ரீமேக் ரைட்ஸ் எதையும் வாங்கவில்லை. நேரடியாக தெலுங்கில் இருந்து ‘ஒக்கடு’, ‘ஜெயம்’ இரண்டையும் உல்டா அடித்து காரசாரமாக மசாலா ஆக்‌ஷன் ஸ்க்ரிப்ட். குறிப்பிடத்தக்க சில ஆவணப்படங்களை இயக்கிய திலீப்கோஷ்தான் இயக்குனர். ஹீரோயின் முன்னாள் மிஸ் இந்தியா பூஜா சோப்ரா.


villan
இந்தியன் கமாண்டோவான ஹீரோ ஒரு ஹெலிகாஃப்டர் விபத்தில் சீன எல்லையில் விழுந்து விடுகிறார். இவரை உளவாளி என்று நினைத்து சீன இராணுவம் சித்திரவதை செய்கிறது. இந்திய அரசோ சீனாவோடு சிக்கலில் மாட்டிக்கொள்ள விரும்பாமல் கமாண்டோவை கைகழுவி விடுகிறது. அங்கிருந்து எப்படியோ சாகசங்கள் செய்து கமாண்டோதப்பிக்கிறார்.


வரும் வழியில் மதுரை மாதிரி ஒரு ஊர். செல்லம் பிரகாஷ்ராஜ் மாதிரி ஒரு வில்லன். த்ரிஷா மாதிரி ஒரு ஹீரோயின். வில்லனுக்கு ஹீரோயின் மீது மரணக்காதல். கனடாவுக்கு விசா வாங்கி தப்பிச் செல்ல நினைக்கிறார் ஹீரோயின். பஸ் ஸ்டேண்டில் வில்லன் ஆட்கள் சுற்றிவிட, யதேச்சையாக ஹீரோ கொஞ்சம் ஸ்ட்ராங்காகவே நாலு பேரை தூக்கிப்போட்டு, ரெண்டு மூன்று பேரின் கைகாலை உடைத்து, ஓரிருவரின் முகரையை பெயர்த்து தட்டிக் கேட்க.. ஆரம்பிக்கிறது பிரச்சினை. ஹீரோவோடு ஹீரோயின் தப்பிக்க நினைக்கிறார். வில்லன் ஆங்காங்கே செக்போஸ்ட் போடுகிறார். ஹீரோவும், ஹீரோயினும் காட்டுக்குள் நுழைந்து ஓட, ஃபாரஸ்ட் ஆட்களின் உதவியோடு வில்லன் வேட்டையாட வருகிறார். அதேதான் நம்ம கில்லிதான். காட்டில் ஓடும் காட்சிகள் மட்டும் ஜெயம். இந்திப்படங்களையோ, ஹாலிவுட் படங்களையோ சுட்டு நாம் தமிழில் சீன் பிடித்துக் கொண்டிருக்கும் காலத்தில், பாலிவுட் காரர்கள் தெலுங்கில் இருந்து சீன் பிடிக்கிறார்கள். முன்னொரு காலத்தில் தமிழ்ப்படக் காட்சிகளை சுட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போதுதான் நாம் சிந்திப்பதே இல்லையே.
           commondo
சாதாரணமான கதை என்றாலும் அதை அசாதாரணமான படமாக ஆக்கியிருப்பது வித்யூத் ஜம்வாலின் திகட்டாத ஆக்‌ஷன் காட்சிகள். சண்டை என்றால் ஏனோ தானோவென்று காதில் பூ சுற்றாமல், மனித முயற்சியில் அதிகபட்சமாக எது முடியுமோ அதை முயற்சித்திருக்கிறார். இப்படத்தில் நடிப்பதற்காகவே கமாண்டோக்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை கற்றிருக்கிறார். ஓடிவந்து காரின் சிறிய சன்னலுக்குள் அடிபடாமல் பாய்ந்து வெற்றிகரமாக நுழைகிறார். சட்டென்று கைகளை தரையில் ஊன்றி அப்படியே கால்களை அந்தரத்தில் தூக்கி சிசர்ஸ் கட் பாணியில் வில்லன்களை பந்தாடுகிறார். முதல் காட்சியில் பிளக்கும் வாய் இண்டர்வெல்லில் பாப்கார்னை மெல்லுவதற்காகதான் மூடுகிறது. இண்டர்வெல்லுக்கு பிறகும் ஆட்டோமாட்டிக்காக நம் வாய் ஆச்சரியத்தில் பிளப்பதை தடுக்கவே முடியவில்லை. இந்தியாவின் வெற்றிகரமான முதல் ரியல் ஆக்‌ஷன் ஹீரோவை திரையில் காணும் அற்புத அனுபவம் இது.

அதனால்தான் வடஇந்திய சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்களில் கொண்டாடுகிறார்கள். ஓபனிங் வாரத்தில் மட்டுமே 11.25 கோடியை வசூலித்திருக்கிறது. ஒரு லோ பட்ஜெட் படத்துக்கு பிரமாதமான வசூல் இது. விமர்சகர்கள் வழக்கம்போல அது நொட்டை, இது சொட்டை என்று எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ரசிகர்களொடு ஒரே புள்ளியில் இவர்கள் என்றாவது இணைந்தால்தான் அதிசயம் என்பதால் வழக்கம்போல இவர்களை புறந்தள்ளிவிட்டு, கமாண்டோவை கொண்டாடுவோம்.

(நன்றி : cinemobita.com)

Viewing all articles
Browse latest Browse all 406

Latest Images

Trending Articles


ஆஸ்திரேலியாவில் ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர் ஆலயம் - குகையில் இருக்கும் அதிசய...


விருப்பங்கள் நிறைவேற காமாட்சி தேவி மந்திரம்


நீங்கள் வாசித்த கிரைம் நாவல் கதாபாத்திரங்கள் சினிமாவுக்கு வருகிறார்கள்!


3 மாதங்களில் ரூ.16,000 அதிகரிப்பு டிஎம்டி கம்பிகள் விலை கிடுகிடு உயர்வு:...


முகம் காட்டச் சொல்லாதீர்.....


திருச்சி - ” முட்டாள் முத்து “ எனப்படும் பரமசிவம்


ஜோதிடம் -கரணங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும்


சித்தன் அருள் - 1002 - அன்புடன் அகத்தியர் - கோடகநல்லூரில் கொங்கணவர் பொதுவாக்கு!


ஆசீர்வாத மந்திரங்கள்


தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்



Latest Images