ஏப்ரல் வந்தாச்சி. கோடை வந்தாலே நம்மிடம் சகமனிதர்கள் யாரும் பேசுவதில்லை. குரைக்கிறார்கள். நாமும் பதிலுக்கு குரைத்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. யாரை சொல்லியும் குற்றமில்லை. சூரிய பகவானின் அக்னிவிளையாடல். கேஷுவல் என்றால் டைட்டாக ஜீன்ஸும், டீ-ஷர்ட்டும் (பெண்களும் கூடத்தான்), ஃபார்மல் என்றால் முழுக்கைச் சட்டையை முரட்டுப் பேண்டில் இன் செய்து, பெல்ட் மாட்டி, ஷாக்ஸ் அணிந்து மேலே ஷூவும் சொருகிக் கொள்வதால் விளையும் எரிச்சலான விளைவு இது. வியர்வை கசகசக்கும் கோடைகாலத்தில் சினேகபாவம் மனிதர்களிடம் குறைவதில் ஆச்சரியம் ஏதுமில்லைதான். ஒயிட் & ஒயிட்டில் வேட்டி-சட்டையை யூனிஃபார்ம் ஆக்கிக்கொண்ட அரசியல்வாதிகளை பாருங்கள். சட்டசபையில் காவலர்களால் வெளியேற்றப்படும் நேரத்திலும் கூட கூலாக சிரிக்கிறார்கள். Dress does the matter.
மகாத்மா காந்தியின் டிரெஸ் கோட் என்பது வெறும் அரசியல் காரணங்களை மட்டும் உள்ளடக்கியது அல்ல. இந்தியா போன்ற வெப்பமண்டல நாட்டுக்கு இயல்பாகவே பொருந்தும் உடை கதர்தான். கதர் அணிவதற்கு வரலாற்று, பொருளாதார, அரசியல், சமூக, உளவியல் மற்றும் கலாச்சார நியாயங்கள் ஏராளம் நம்மிடம் உண்டு. காதிபவன்களில் கதர் கிடைக்கிறது. கோஆப்டெக்ஸ் கடைகளிலும் ஆண், பெண் இருபாலருக்கும் அருமையான கைத்தறி உடைகள் கிடைக்கிறது. ஆனாலும் குளிர்நாடுகளில் வெள்ளைக்காரர்கள் அணியும் உடைதான் ஃபேஷன் என்று நம்புவதால் கைத்தறியை கைவிட்டுவிட்டோம். கைத்தறி உடையை அணிவதற்கு நமக்கிருக்கும் மனத்தடை நீங்கும் பட்சத்தில் உடை விஷயத்தில் கோடையை எதிர்கொள்வது சுலபம்.
திடீரென்று எப்படி கைத்தறிக்கு மாறமுடியும், வேறு மார்க்கமில்லையா என்று கேட்பவர்களுக்கு கீழ்க்கண்ட டிப்ஸ்கள் உதவக்கூடும் :
· இறுக்கமில்லாத ஆடைகளை அணியுங்கள். காற்று சுலபமாக உங்கள் உடலுக்குள் ஊடுருவட்டும்.
· முழுக்கை சட்டைகளை கோடை முடியும் வரை தவிர்க்கலாம்.
· டீஷர்ட்டாக இருந்தால் காலர் வைக்காத ஓபன்-நெக் சர்ட்டை தேர்ந்தெடுப்பது நல்லது.
· ஜீன்ஸ் வேண்டவே வேண்டாம். பெண்களும் கொஞ்சநாட்களுக்கு லெகின்ஸை தவிர்க்கலாம்.
· லெதர் ஜாக்கெட் மாதிரியான உடைகளை மறந்துவிடுங்கள். சிந்தெடிக் மெட்டீரியல் உடைகளையும் தவிருங்கள்.
· பெண்களை பொறுத்தவரை காட்டன் சல்வார் கமீஸ்தான் கோடைக்கு பொருத்தமான உடை.
· பார்க்க கொஞ்சம் சுமாராகதான் இருக்கும். இருந்தாலும் ஆண்கள் ஜிப்பா முயற்சிக்கலாம்.
· காட்டன் பெர்முடாஸ், ஷார்ட்ஸ் போன்றவை கோடைவிடுமுறையில் வீட்டில் லூட்டி அடிக்கும் வாண்டுகளுக்கு பொருத்தமானவை.
இந்த கோடையிலிருந்தாவது யாரை பார்த்தாலும் குரைக்காமல், புன்னகைக்க முயற்சிப்போம்.
(நன்றி : புதிய தலைமுறை)